• Tue. Mar 11th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

மும்முனைப் போர்… டெல்லியை வெல்லப் போவது யார்… தொடங்கியது கவுண்டன்!

Delhi election 2025

பிப்ரவரி-05, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மக்கள் பெருமளவில் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்தியாவின் இதயமாக கருதப்படும் தலைநகர் டெல்லியை ஆளப்போவது யார் என்பதை முடிவு செய்யும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இன்றைய வாக்குப் பதிவுக்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதனையடுத்து, வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வயதானர்வர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தங்களது ஜனநாயக கடமையையை மேற்கொள்ள காலை முதலே வாக்குச் சாடிகளில் திரண்டனர்.

இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இத்தேர்தலில் புதுடெல்லி தொகுதியல் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகவும் முக்கியமான போட்டி நிலவுகிறது. இத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் வர்மா மற்றும் டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்ஷத்தின் மகனும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான சந்திப் தீக்ஷித் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இதேபோல், கல்காஜி தொகுதியில் தற்போதைய முதலமைச்சர் அதிஷி, பாரதிய ஜனதா டெல்லி பிரதேச தலைவர் ரமேஷ் மிதுரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் அல்கா லம்பா இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சி தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்ற ஜன்புரா தொகுதிகள் இந்த முறை அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மணிஷ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் தர்வீந்தர் சிங் மார்வாவும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஃபர்கத் சூரியும் போட்டியிடுகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினர் பன்சூரி ஸ்வராஜ் காலையிலேயே வாக்கச்சாவடிக்கு வந்து வாக்குப்பதிவு செய்தார். பின்னர், பேட்டியளித்த அவர், மக்கள் அனைவரும் பெருமளவில் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இத்தேர்தலில் பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பல்வேறு இலவச திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அள்ளி வீசியுள்ளன. ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம்தோறும் 2,100 ரூபாய் வழங்கப்படும் என்றும், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் 2500 ரூபாய் மாதத்திற்கு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளன.

டெல்லியில் கடந்த மூன்று முறை தொடர்ச்சியாக ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி இந்த முறையும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. அதேபோல், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது.

பாரதிய ஜனதா கட்சியை பொருத்தமட்டில் கடந்த 27 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால், இந்த முறை உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து வரும் 8 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அரியணையில் ஏறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எகிறி உள்ளது.

By VP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *