ஜன-04, ஶ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பகல் பத்து ஐந்தாம் திருநாளில் நம்பெருமாள் மாந்துளிர் நிறத்திலான பட்டாடை உடுத்தி அருள் பாலித்தார்.
ஶ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகறது. விழாவின் 5 வது நாளில் நம்பெருமாள் மாந்துளிர் நிறத்திலான பட்டாடை உடுத்தி, சௌரிக்கொண்டை சாற்றிக்கொண்டு, கலிங்கத்துராய் நெற்றி சரம், சூர்ய- சந்திர வில்லை சாற்றி, மகர கர்ண பத்திரம்,ரத்தின அபய ஹஸ்தம்- தொங்கல் பதக்கம், ரத்தின கடி அஸ்தம் , திரு மார்பிலே ஆபரணங்களுக்கே மிக அழகான வேலைப்பாடுடன் கூடிய ஸ்ரீரங்க விமான பதக்கம் சாற்றி அலங்காரத்துடன் அருள் பாலித்தார். அதனுடன் அடுக்கு பதக்கங்களும் நெல்லி மாலை, பதினெட்டு பிடி முத்து சரம் , காசு மாலை, அரைச் சலங்கை, பின் சாத்துபடியாக- புஜ கீர்த்தியும் அண்ட பேரண்ட பக்ஷி பதக்கமும் காசு மாலையும் கையில் தாயத்து சரங்களும்,தங்க தண்டைகளை திருவடியிலே சார்த்திக்கொண்டு ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கு அனுகிரஹம் செய்தார்.
அரங்கனின் அத்யயன உற்சவத்தின் ஐந்தாம் திருநாளில் அரையர் திருவாராதனம் என்னும் வைபவம் திருமாலை 45 பாசுரங்கள், திருப்பள்ளியெழுச்சி 10 பாசுரங்கள், அமலனாதிபிரான் 10 பாசுரங்கள் என மொத்தம் 65 பாசுரங்கள், அரையர் ஸ்வாமிகளால் நம்பெருமாள் முன்பு சேவிக்கப்படும். திருமாலையில் ” காவலிற் புலனைவைத்து” என்ற பாசுரத்திற்கும், அமலனாதிபிரானில் முதல் பாட்டிற்கும் அபிநய வியாக்கியானங்கள் சேவிக்கப்படும். திருமாலை 1 ம் பாட்டு தொடங்கி 6 ம் பாட்டு மூன்றாம் பாதம் அரங்கனார்க்கு ஆட்செய்யாதே என்ற சொற்றொடர் வரை அபிநயம் மட்டும் நடைபெறும்.
“அரங்கனார்க்கு ஆட்செய்யாதே” என்ற பாசுர சொற்றொடரை அரையர்கள் அபிநயித்த பிறகு நம்பெருமாளுடைய திரு அத்யயனஉற்சவத்தின் வைபவங்கள் அனைத்தையும் புறப்பாடு திருவாராதனம், அருளப்பாடு வேத விண்ணப்பம் ஆகிய நிகழ்ச்சிகள் அபிநயித்த பிறகு, மற்ற பாசுரங்கள் சேவிக்கப்படும். அரங்கன் ஆலயத்தில் நாள்முழுவதும் உத்சவ காலங்களில் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளுவதற்கு முன்பு நடைபெறும் நிகழ்ச்சிகளையும் அரையர்கள் தங்களின் தாளமான நாதமுனிகளையே நம்பெருமாளாகப் பாவித்து சேவிப்பார்கள். திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களில் எந்த பாசுரங்களுக்கும் அபிநயமோ அல்லது விரிவுரையோ சேவிக்கப்படுவது இல்லை.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் சந்நிதியில் இருந்து,அரையர் ஸ்வாமிகளுக்கு இன்று மரியாதை செய்விக்கப்படும். பிறகு வழக்கம் போல் மாலை நம்பெருமாள் அர்ஜுனமண்டபத்தில் இருந்து, புறப்பாடு கண்டருளி மேலைப்படி வழியாக சந்தனமண்டபத்திற்கு எழுந்தருளிய பிறகு திருமடைப்பள்ளியில் இருந்து தாஸிகள் தட்டி எனப்படும் தடித்த திரிகளினால் இரண்டு தீபத்தினைக் கொண்டு வருவார்கள். 1953 ம் ஆண்டுதாஸிகள் ஒழிப்புச்சட்டம் வந்தபிறகு கோயிலில் தாஸிகள் கைங்கர்யம் நிறுத்தப்பட்டது. ஆதலால் தற்பொழுது ஆலய கைங்கர்ய பரர்களே தட்டிதீபம் கொண்டு வருகிறார்கள்.
இதன்பிறகு, ஸ்தாநீகர் “பெரிய கோயில்நம்பி” என்று அருளப்பாடு சாதிப்பார் அப்போது திருவரங்கத்தமுதனார் வம்சத்தில் வந்தவர்கள் முன்னே வந்து நம்பெருமாளுக்கு திருவந்திக்காப்பு கட்டியம் சேவிப்பர்கள். பிறகு மங்கள வாத்தியம் என்று ஸ்தாநீகர் அருளப்பாடு சாதித்ததும், நட்டு முட்டு வாத்தியங்கள் முழங்கும் கடதீபம் ஏற்றப்பட்டு கீழே வைக்கப்படும்.
ஸாமா நாயிந்தே ஸாமா என்று ஸ்தாநீகர் சொல்ல அதற்கு வைஷ்ணவன் பேசாதே சத்து(பேசாதே ..சப்தமிடாதே என்ற பொருளில்) சாதிப்பார்கள். பிறகு அர்ச்சகர் பெருமாளுக்கு, அர்க்யம் பாத்யம் சமர்ப்பித்து திருவடி விளக்குவதேல் என்று ஸ்தாநீகர் சொன்னதும் உட்சாத்தினால் நம்பெருமாளின் திருமுகத்தையும் திருவடியையும் துடைத்து விடுவர்.பிறகு ஸ்தாநீகர் திருமணி பரிமாறுவான் என்றதும் கீழே வைக்கப்பட்ட கடதீபத்தினால் திருவந்திக்காப்பு (ஆரத்தி)ஆகும். பிறகு நம்பெருமாள் ஸர்ப்ப கதியில் கர்ப்ப க்ருஹத்திற்கு எழுந்தருளுவார்.