உலகப் புகழ்பெற்ற காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியான மஹா பெரியவா பெயரில் மடத்துக்கு துளியும் சம்மந்தமில்லாத சில தனிப்பட்ட நபர்கள் பல்வேறு விதங்களில் நூதன முறையில் திட்டங்கள் திட்டி பல கோடி ரூபாயை வசூலித்து வருவதாக பக்தர்கள் சிலர் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.
மஹா பெரியவா என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஜகத்குரு ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரிய மஹா ஸ்வாமிகள், காஞ்சி சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதியாவார். உலக நன்மைக்காவும், நாட்டின் நன்மைக்காவும், சனாதன தர்மத்தை நிலை நாட்டவும் பல்வேறு அற்புத காரியங்களை நிகழ்த்தியவர்.
தனது வாழ்நாள் முழுவதும் வேத நெறிமுறைகளை பின்பற்றி மிக எளிமையாக வாழ்ந்ததோடு, ஏழை- எளிய மக்களுக்கு கல்வி, மருந்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டவர். குறிப்பாக பராமரிப்பு இல்லாமல் உள்ள சிவாலயங்களை பாதுகாக்க பக்தர்கள் முன்வர வேண்டும், அதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இதனால், உலகம் முழுவதும் மஹா பெரியவாளுக்கு கோடிக் கணக்கான பக்தர்கள் தற்போது உள்ளனர். இந்நிலையில், மஹா பெரியவா பெயரை பயன்படுத்தி காஞ்சி சங்கர மடத்திற்கு துளியும் சம்மந்தமில்லா சில தனிப்பட்ட நபர்கள் அறக்கட்டளை என்ற பெயரில் மஹா பெரியவாளுக்கு கோயில் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்வதாகக்கூறி பக்தர்களிடம் இருந்து கோடிக் கணக்கில் பணத்தை வசூல் செய்து, கொள்ளையடித்து வருவதாக பக்தரகள் சிலர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரில் கணேஷ சர்மா என்பவர் ஒரு தனியார் அறக்கட்டளையை தொடங்கி கோடிக்கணக்கில் பக்தர்களிடம் வசூல் செய்து, மஹா பெரியவா கோயில் கட்டியுள்ளார். ஆனால், குறிப்பிட்ட அந்த இடம் சரியான விலைக்கு வாங்கப்பட்டதா? கட்டுமானப் பணி உள்ளிட்ட மற்ற பணிகள் மேற்கொள்ள செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்ட தொகை அனைத்தும் சரியானது தானா? என்பது யாருக்கும் தெரியாத புதிராக உள்ளதாக பக்தர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த குறிப்பிட்ட தனியார் அறக்கட்டளையின் அறங்காவலர் கணேஷ சர்மா, மஹா பெரியவா பெயரை சொல்லி நன்கொடையாக பெற்ற பணத்தில், காஞ்சி சங்கரமடத்திற்கு இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்பதும் குற்றச்சாட்டு. இதுகுறித்து அவரிடம் கேட்டால், நான் என்ன காஞ்சி சங்கரமடத்திற்கு ராயல்டி கொடுக்க வேண்டுமா? மஹா பெரியவா என்ன அவர்களது சொத்தா? அங்கு நடப்பது எனக்குத் தெரியாதா? என்பது போன்ற வார்த்தைகளை வெளிப்படுத்தி வருகிறாராம்.
இதுபோதாது என்று, தற்போது பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து அதற்காக பக்தர்கள் நன்கொடை அளிக்குமாறு விளம்பரப்படுத்தி வருகிறாராம்.
இதுகுறித்து மஹா பெரியவா பக்தர் ஒருவர் முகநூலில் வெளியிட்ட பதிவையும், அதற்கு சில பக்தரகள் தெரிவித்த கருத்துக்களையும் அனைவரின் பார்வைக்காக வெளியிடுகிறோம். பக்தர்கள் தெரிவித்த கருத்துக்கள் கமெண்ட்ஸில் உள்ளன.
எல்லாம் சரி பெரியவா கோயில் கட்ட கணேஷ சர்மாவும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எவ்வளவு தொகை அளித்தனர் என்பது குறித்து விளக்கமுடியுமா என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.