ஜனவரி-16, மத்திய அரசு ஊழியர்களுக்கான 8 வது ஊதியக்குழு அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். எனவே, சம்பளம் எவ்வளவு உயரும் என மத்திய அரசு ஊழியர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
8 வது ஊதியக்குழு அமைக்கப்படுமா? அல்லது வேறுமுறையை அரசு அமல்படுத்துமா? என்ற குழப்பம் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவி வந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையிலான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 8 வது ஊதியக்குழு அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
PM @narendramodi Ji has approved the 8th Central Pay Commission for all Central Government employees. pic.twitter.com/4jl9Q5gFka
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 16, 2025
பட்ஜெட்டில் 8 வது ஊதியக்குழு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், முன்னதாகவே அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஊதியக்குழு அமைப்பதற்கான தேதி, அதில் இடம்பெறும் உறுப்பினர்கள் உள்ளிட்டவை குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக்குழு அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது அமலில் உள்ள 7 வது ஊதியக்குழு கடந்த 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி 8 வது ஊதியக்குழுவின் பரிந்துரை அடிப்படையிலான ஊதிய உயர்வு வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
8 வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசின் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 18 ஆயிரத்தில் இருந்து 51,480 ரூபாயாக உயரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.