ஜனவரி-05, இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இழந்துள்ளது.
சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியின் 2 வது இன்னிங்ஸில் 162 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி்க்கு சாம் ஹோன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா இணை சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சாம் ஹோன்ஸ்டாஸ் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரதீஸ் கிருஷ்ணா பந்துவீச்சில் வெளியேறினார். உஸ்மான் கவாஜா 43 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது சிராஜ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பந்திட்டம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அடுத்து களமறிங்கிய லேபுஷேன் 6 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். எனினும், டிராவிஸ் ஹெட் (34), வெப்ஸ்டர் (39) பொறுப்புடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 181 ரன்களும் எடுத்திருந்த நிலையில், 4 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2 வது இன்னிங்ஸைத் தொடங்கியது.
வழக்கம்போல முன்னணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த ரிஷப் பந்த் மட்டும் அதிரடியாக பேட் செய்து 33 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியில் அடைந்த தோல்வியின் காரணமாக பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 3-1 என இழந்துள்ளது.