• Wed. Mar 12th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

உடையும் இண்டி கூட்டணி; கெஜ்ரிவால் மீது ராகுல் காந்தி சரமாரி குற்றச்சாட்டு!

ByVP

Jan 14, 2025
Rahul attacks Kejriwal hard

ஜனவரி-14, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். இதனால், தேசிய அளவில் இண்டி கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. கடந்தமுறை 62 தொகுதிகளில் வென்று ஆட்சியமைத்த ஆம் ஆத்மி இம்முறையும் வெற்றிபெற்று 4 வது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பிலும், 8 தொகுதிகளை மட்டுமே கடந்தமுறை வென்ற பாஜக, இம்முறை வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் அரியணையில் அமரும் உத்வேகத்துடனும், கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத காங்கிரஸ் இம்முறை தாங்களும் ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் களமிறங்கியுள்ளன.

இதனால், டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களும், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி முன்னணி தலைவர்களும், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு்ள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் தங்களது உரிமைகளை பெற்றுவிடக் கூடாது என பிரதமர் மோடி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் இருவரும் விரும்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடியைப் போல அரவிந்த் கெஜ்ரிவாலும் போலி வாக்குறுதிகளையும், பரப்புரைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் இணைந்து டெல்லி மக்களுக்கு எதிராக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் அண்மையில் முடிவடைந்த சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, அம்மாநிலத்தில் இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சிகளிடையே பிரச்சனை வெடித்துள்ளது. மஹாராஷ்டிராவில் விரைவில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக உத்தவ் தாக்கரே கட்சி அறிவித்துள்ளது.

மம்தா பானர்ஜி ஒருபுறம் இண்டி கூட்டணிக்கு தன்னை தலைவராக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், டெல்லி தேர்தல் முடிவுகள் இண்டி கூட்டணியின் தலைவிதியை நிர்ணயிக்கும் விதமாக இருக்கும் என கருத்து நிலவுகிறது.

By VP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *