ஜனவரி-08, இந்தியாவில் HMPV வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்களை துரிதப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
HMPV எனப்படும் வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வரும் நிலையில், மலேசியா, கஜகிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில், HMPV வைரஸ் பரவல் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 7 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகவில் சில தினங்களுக்குமுன் 2 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து குஜராத்தில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் இருவருக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் 7 பேருக்கு இவ்வகை வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என மத்திய சுகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்களை துரிதப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.