ஜனவரி – 18, கொசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப் படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப் படுவது மற்றும் சவுண்டு மண் எடுப்பதை தடுக்க உடனடியாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மணல் அள்ளுவதை தடுக்க தவறினாலோ அல்லது அரசு அதிகாரிகள் அனுமதித்தாலோ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளப்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மணல் மற்றும் சவுண்டு மண் எடுப்பதை தடுக்க தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் மற்றும் சவுடு மண் அள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகப்பெரிய அளவில் சரிந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக, கனிமவள பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.