• Fri. Mar 14th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; பாஜக புறக்கணிப்பு!

Erode east By-election

ஜனவரி-12, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாரதிய ஜனதா கட்சியும் இன்று அறிவித்துள்ளது. அதிமுகவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளதால், திமுகவின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருவதாகவும், எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை, Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல் என்றும், கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை அனைவருமே எதிர்கொண்டதாக கூறியுள்ளார்.

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல் என்றும், அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளதாகவும், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே தங்களது இலக்கு என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

அதிமுகவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிடாத நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டுமே வேட்பாளரை களமிறக்க உள்ளதால், ஆளும் திமுகவின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

By VP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *