பிப்ரவரி-08, டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஆத்மி கட்சித் தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவல் தோல்வியடைந்தார். அதேபோல் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவும் தோல்வியை தழுவினார். டெல்லி சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாரதிய ஜனதா 45 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், டெல்லி தேர்தலில் ஆளும் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் பாரதிய ஜனதா வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் 3000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
அதேபோல், ஜன்புரா தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான மணிஷ் சிசோடியா பாரதிய ஜனதா வேட்பாளரிடம் 1200க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வி முகத்தில் உள்ளனர்.
எனினும், கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய முதலமைச்சர் அதிஷி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்றுவரை பின்னிலையில் இருந்த அதிஷி, இறுதிச்சுற்றில் வெற்றிபெற்றார்.