• Wed. Mar 12th, 2025

உரக்கச் சொல்வோம் உலகிற்கு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; களமிறங்குமா பாஜக, அதிமுக?

ஜனவரி-11, ஈரோடு இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் களமிறங்குவார்களா? தேர்தல் களம் சூடுபிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் முடிவு பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஈரோடு இடைத்தேர்தல் மீண்டும் தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே இம்முறையும் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் கொள்ளை பரப்பு இணைச் செயலாளருமான வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என இன்று காலை அறிவிப்பு வெளியானது. 

வி.சி.சந்திரகுமார் இத்தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார். இதனையடுத்து, அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தேர்தலில் போட்டியிடுவதா அல்லது விக்கரவாண்டி இடைத்தேர்தலைப் போன்று தேர்தலை புறக்கணிப்பதா? என்பது குறித்து விவாதிக்க அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை களமிறக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்தமுறை இடைத்தேர்தல் நடைபெற்றபோது பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் வேட்பாளர் களமிறக்கப்பட வில்லை. ஓ.பி.எஸ் அணி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பிலும் வேட்பாளர்கள் போட்டியிடவில்லை. ஆனால், இம்முறை அதிமுக, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் தனித்தனியே வேட்பாளர்களை களமிறக்கி தங்களது செல்வாக்கை நிரூபிக்க வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளதால், மும்முனைப் போட்டி உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ள நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இத் தேர்தலில் போட்டியிடுமா என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 13 மற்றும் 17 தேதிகள் மட்டுமே எஞ்சி இருப்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

 

 

By VP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *