ஜனவரி-10, இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 3 வது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 241.30 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 95 புள்ளிகளும் சரிந்தன.
இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குவர்த்தகத்தில் சற்று ஏற்ற- இறக்கங்கள் தொடர்ந்து வந்தன. சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் மந்தமான சூழ்நிலை, சரியும் பொருளாதார வளர்ச்சி, கடந்த காலாண்டில் முக்கிய நிறுவனங்களின் வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவு ஆகியவை முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு, அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது ஆகியவையும் இந்த சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 241.0 புள்ளிகளில் அதாவது 0.31 சதவிகிதம் சரிந்து 77,919.70 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 95 புள்ளிகள் அதாவது 0.40 சதவிகிதம் சரிந்து 23.431.50 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ, இன்போஸிஸ், ஹெச்.சி.எல் ஆகிய மென்பொருள் நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்வை சந்தித்தன. டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 12, 380 கோடி ரூபாய் நிகர லாபம் எட்டியது, மென்பொருள் நிறுவனப் பங்குகளின் உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஶ்ரீராம் பைனான்ஸ், என்.டி.பி.சி, அதானி என்டெர்டெய்ன்மென்ட், இன்டஸ் பாங்க், சன்பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகத்தில் சரிவை சந்தித்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசாக்கள் சரிந்து 86 ரூபாயாக உள்ளது.