ஜனவரி-06, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இம்முறை பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதி என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விரைவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், முன்கூட்டியே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப் படுத்தியுள்ளன. 70 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கான தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
ஆம் ஆத்மி, காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு் விட்ட நிலையில், பாரதிய ஜனதா கட்சியும் வேட்பாளர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
டெல்லியில், நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, டெல்லி மக்களுக்காக ஓய்வின்றி உழைக்க பாரதிய ஜனதா கட்சி உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார். போக்குவரத்து வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளாக மெட்ரோ ரயில் சேவைப் பணிகள் டெல்லியில் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். டெல்லி மக்கள் பாரதிய ஜனதா கட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கை தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.