பிப்ரவரி-20, வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன் டிராபி போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணிவிளையாடியது. இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 200 விக்கெட்டுகளை வீழ்த்தி தனிப்பட்ட மைல்கல்லை எட்டினார். வங்கதேச வீரர் ஜாக்கர் அலியை 68 ரன்களில் ஷமி அவுட் ஆக்கினார். ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முகமது ஷமியின் 200 விக்கெட்டுகள் இதுவாகும்.

முகமது ஷமி தனது 104வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஆகியோருக்குப் பிறகு குறைந்த போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஷமி பெற்றார். சக்லைன் முஷ்டாக்கும் தனது 104வது ஒருநாள் போட்டியில் 200வது விக்கெட்டை கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் 102 போட்டிகளில் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
ஐசிசி போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஷமி மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லையும் எட்டினார். ஐசிசி போட்டிகளில் 72 விக்கெட்களை வீழ்த்தியதன்மூலம், ஜவஹல் ஸ்ரீநாத்தின்(69 விக்கெட்) சாதனையை ஷமி முறியடித்தார்.