பிப்ரவரி-20, டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா இன்று பதவியேற்க உள்ளார். துணை முதலமைச்சராக பர்வேஸ் வர்மாவும், முக்கிய அமைச்சர்கள் சிலரும் பதவியேற்க உள்ளனர்.
டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் 48 இடங்களில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த 8 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், புதிய முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

டெல்லி பாஜகவின் க்கிய முகங்களாக கருதப்பட்ட பர்வேஸ் வர்மா, ரமேஷ் பிதூரி, ரேகா குப்தா, பின்சூரி ஸ்வராஜ், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ரேகா குப்தா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து இன்று நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில் டெல்லியின் ஒன்பதாவது முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

டெல்லி முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள ரேகா குப்தா கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து பாரதிய ஜனதா கட்சியில் பணியாற்றி வருகிறார். முதலில் அக்கட்சியின் மாணவர் அமைப்பில் முக்கிய பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி வந்தார். அதனைத் தொடர்ந்து டெல்லி மாநகராட்சியில் மூன்று முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் கிழக்கு டெல்லி மாநகராட்சியின் மேயராகவும் பதவி வகித்தார். டெல்லி பிரதேச பாஜக பொதுச்செயலாளர், தேசிய மகளிரணி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார்.
இந்தமுறை டெல்லியில் உள்ள சாலிமர் மார்க் தொகுதியில் போட்டியிட்ட ரேகா குப்தா ஏறக்குறைய முப்பதாயிரம் ஓட்டுகள் வித்யாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரை தோற்கடித்தார். டெல்லியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரேகா குப்தாவை பாரதிய ஜனதா கட்சி முதலமைச்சராக அறிவித்துள்ளது.

இதனால் அந்த மாநிலத்தின் நான்காவது பெண் முதலமைச்சராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்க உள்ளார். டெல்லியில் கடந்த சில தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெண்கள் அதிக அளவில் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து இந்த முறை நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதா கட்சியும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.
50 வயதாகும் ரேகா குப்தா ஹரியானா மாநிலத்தில் பிறந்தார். ரேகா குப்தாவுக்கு 2 வயது இருக்கும் போது அவரது குடும்பத்தினர் ஹரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்தனர்.