பிப்ரவரி-20, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
கராச்சியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்தில் குரூப் ஏ பிரிவின் முதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக யங் மற்றும் கான்வே களமிறங்கினர்.
கான்வே அப்ரார் முகமது வீச்சில் 10 ரன்கள் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து வில்லியம்சன் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். டேரல் மிச்சல் 10 ரன்களில் ஹாரிஸ் ராப் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனை தொடர்ந்து லாத்தம் மற்றும் யங் இணை அதிரடியாக விளையாடியது. இறுதியில் கிளன் பிலிப்ஸ் 39 பந்துகளில் 61 ரன்கள் குவிக்க நியூசிலாந்த அணி 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 320 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் நதீம்ஷா, ஹாரிஸ் ராப் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.
இதனையடுத்து, 321 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஷகில் மற்றும் பாபர் ஆசாம் களம் இறங்கினர். ஷகில் 6 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிஸ்வான் 3 ரன்களில் வெளியேறினார். பின்னர், பர்கத் ஜமான் 24 ரன்களும், அஹா 42 ரன்களும் எடுக்க, பாபர் அசாம் 64 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அதிரடி ஆட்டம் காட்டிய ஷா 49 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். எனினும் 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி 260 ரன்கள் மட்டுமே எடுத்து, 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து தரப்பில் சான்ட்னர், ரோர்கி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹென்றி 2 விக்கெட்களையும், ஸ்மித் மற்றும் பிரேஸ்வல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.