பிப்ரவரி-15, காசி தமிழ்ச் சங்கமம் 3.0 நிகழ்ச்சி நாளை தொடங்க உள்ள நிலையில் சென்னையிலிருந்து முதல் குழுவுடன் புறப்பட்ட ரயிலை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 3 வது ஆண்டாக வரும் 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்காக விரிவான ஏற்பாடுகள் சென்னை ஐஐடி சார்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டில் இருந்து 5 குழுக்களாக ஆயிரம் பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் சென்னை ஐஐடி சார்பில் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய கலாச்சார மையங்களுக்கு இடையிலான தொடர்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

கைவினைக் கலைஞர்கள், தொழில் வல்லுனர்கள், தொழில் முனைவோர், மாணவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் இக்குழுக்களில் இடம்பெற உள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குழுவினர் பிரயாக்ராஜ், அயோத்தியா உள்ளிட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆன்மீகத் தலங்களையும் பார்வையிட உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒருங்கிணைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் கோயில்கள் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் எம்.நாச்சியப்பன், கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் ஆகியோர், தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையால் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
Step into the cultural grandeur of #KashiTamilSangamam 3.0 Discover the captivating fusion of spiritual and cultural heritage.
— Kashi Tamil Sangamam (@KTSangamam) February 15, 2025
From today, Feb 15th to 24th, join us for the inauguration at 3:00 PM 📍 Namo Ghat, Varanasi.#VanakkamKashi pic.twitter.com/w1wB5dCMiA
இந்நிலையில், தமிழ் சங்கமம் 3.0 நிகச்சியில் கலந்துகொள்ளும் முதல் குழு சென்னை ரயில் நிலையத்திலிருந்து 13 ஆம் தேதி பிற்பகல் புறப்பட்டுச் சென்றது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, முதல் குழுவை வழியனுப்பி வைத்தனர்.