பிப்ரவரி-11, தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை பிளந்து எதிரொலித்து வருகிறது.
தை மாதம் வரும் பூச நட்சத்திரம் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாகும். இதனையொட்டி ஆண்டு தோறும் முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவையொட்டி இன்று பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தண்டாயுதபானியை தரிசிப்பதற்காக குவிந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரரையாக பழனிக்கு சென்று முருகனை வழிபட்டு வருகின்றனர்.

அதேபோல் பழனி மலையை சுற்றி 4நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள கிரிவலப் பாதையில் பக்தர்கள் கிரிவலம் சென்று தண்டாயுதபாணி தரிசித்து வருகின்றனர். தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று முத்துக்குமாரசுவாமி வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மாலை தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

தைப்பூசத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதேபோல், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, பழமுதிர்ச்சோலை, சுவாமி மலை உள்ளிட்ட அறுபடை வீடுகளிலும் தைப்பூச திருவிழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் தைப்பூச திருவிழாவை அங்குள்ள முருகன் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தி முருகனை தரிசித்து வருகின்றனர்.