பிப்ரவரி -10, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்து உள்ள நிலையில், சீனியர்களின் சீற்றத்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் சிக்கல் உருவாகி உள்ளது.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சுற்று ஏறக்குறைய 15 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை தீவிரமாக போட்டு வருகின்றன. திமுக கூட்டணி சிதறாமல் அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்று வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு இதுவரை குறிப்பிட்டு சொல்லும் படி எந்த ஒரு தேர்தலிலும் அக்கட்சி வெற்றி பெறவில்லை. 2021 ஆம் ஆண்டு கூட்டணி கணக்கை தவறுதலாக போட்டதால் வெற்றி வாய்ப்பை திமுகவிடம் பறிகொடுத்த எடப்பாடி பழனிச்சாமி, அதன் பிறகு நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் தனது பிடிவாதத்தால் வலிமையான கூட்டணியை அமைக்க தவறினார்.

கடைசி நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முதுகில் குத்தி விட்டு தேமுதிக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகப்பெரிய தோல்வியே கிடைத்தது. 10 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சி 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகளில் 4 வது இடத்திற்குச் சென்றது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
2011 மற்றும் 2016 என இரு தேர்தல்களில் தொடர்ச்சியாக கட்சியை வெற்றிபெறச் செய்து, ஆட்சியை தொண்டர்களிடம் விட்டுச் சென்றார் ஜெயலலிதா. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல்கள், இடைத்தேர்தல் தேர்தல்கள் என அடுத்தடுத்து தோல்வியை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக சந்தித்து நிலையில் உடன்பிறப்புகள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.

இதனை சரி கட்டுவதற்காக மாவட்டம் தோறும் கள ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல மாவட்டங்களில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டங்கள் களேபேரத்தில் முடிவடைந்தன. குறிப்பாக தென் மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மோதிக்கொண்டது அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
எனவே சென்னை உட்பட்ட சில மாவட்டங்களில் நடத்தப்பட வேண்டிய கள ஆய்வுக் கூட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் சென்னையில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுகவின் மிக முக்கிய மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.
இதுதொடர்பாக பேட்டி அளித்த செங்கோட்டையன் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதில் முன்னாள் முதலமைச்சர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா ஆகியோருக்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரிவித்தார். சில விஷயங்கள் தொடர்பாக தனது அதிருப்தியை கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளதாக செங்கோட்டையன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மூத்த தலைவர்களான தங்களை, சில அதிமுக நிர்வாகிகள் மதிப்பதே இல்லை என்றும், கட்சியின் சுவரொட்டிகள், நோட்டீஸ்கள் உட்பட எதிலும் தங்களது பெயரைக்கூட போடுவதில்லை என்றும் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மெகா கூட்டணி அமைப்பார் என அவருக்கு நெருக்கமான சில கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அக்கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அவருக்கு எதிராக திரும்பி உள்ளது எடப்பாடி பழனிச்சாமியின் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை விரும்பாத, கட்சி ஒற்றுமையாகவும் ஒன்றுபட்டும் செயல்பட வேண்டும் என கருதிவரும் பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கூடிய விரைவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திரும்புவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொங்கு கொங்கு மண்டலத்தை இந்த முறை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என திமுக உறுதியாக உள்ளது. அதேபோல், அண்ணாமலையின் வருகைக்குப் பிறகு மேற்கு மண்டலத்தில் பாரதிய ஜனதா கட்சியும் செல்வாக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு சக்தி வாய்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு எடப்பாடி பழனிச்சாமி துரோகம் இழைத்து விட்டதாக அந்த சமுதாயத்தினர் கருதி வருகின்றனர். இதனால், தென் மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிமுக செல்வாக்கை இழந்து வருகிறது.

மற்றொருபுறம் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நெருக்கடியும் உள்ளது. வெளிப்புறத்தில் இருந்து பல்வேறு முனை தாக்குதல்களை இதுவரை சந்தித்து வந்த எடப்பாடி பழனிச்சாமி, தற்போது உட்கட்சியில் இருந்தும் பலத்த எதிர்ப்பை சந்திக்க தொடங்கியுள்ளார்.

இதனால் அதிமுகவின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற களக்கத்தில் உள்ளனர் ரத்தத்தின் ரத்தங்களான கழக உடன்பிறப்புகள்…