பிப்ரவரி-08, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஹாட்ரிக் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றி பெற்று 2 வது இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி 70 இடங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது.

இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று முறை எந்த தொகுதியிலும் வெற்றி பெறாமல் பூஜ்ஜியம் என்ற ஹாட்ரிக் சாதனையை காங்கிரஸ் நிகழ்த்தியுள்ளது. கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8 இடங்கள் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் பாரதிய ஜனதா 32 இடங்களையும், ஆம் ஆத்மி 28 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களையும் பிடித்திருந்தன.

இதனை தொடர்ந்து 28 இடங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்றார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கவிழ்த்தது காங்கிரஸ். பின்னர், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதா கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதா 8 இடங்களில் வெற்றி பெற்று 2 வது இடத்தை பிடித்தது. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் பூஜ்ஜியத்தை பெற்றது.

இந்நிலையில் இன்று வெளியான தேர்தல் முடிவுகளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. பாரதிய ஜனதா 48 இடங்களையும், ஆம் ஆத்மி 22 இடங்களையும் பிடித்த நிலையில், மூன்றாவது முறையாக பூஜ்ஜியம் இடங்களை காங்கிரஸ் பிடித்து ஹட்ரிக் நிகழ்த்தியுள்ளது.