பிப்ரவரி-05, டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்கள் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
70 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர்.
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்துள்ளன.

பி மார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா 39 முதல் 49 இடங்கள் வரையும், ஆம் ஆத்மி கட்சி 21 முதல் 31 இடங்கள் வரையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா 35 முதல் 40 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 32 முதல் 37 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. ஜே வி சி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா 39 முதல் 45 இடங்களையும், ஆம் ஆத்மி 22 முதல் 31 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாணக்யா ஸ்டேட்டர்ஜிஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி 39 முதல் 44 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 25 முதல் 28 இடங்களையும், காங்கிரஸ் 2 முதல் மூன்று இடங்களையும் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சைட் நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில் பாரதிய ஜனதா 40 முதல் 44 இடங்களையும், ஆம் ஆத்மி 25 முதல் 29 இடங்களையும், காங்கிரஸ் பூஜ்ஜியம் முதல் ஒன்று இடங்களில் வெல்லும் என்றும் , போல் டைரி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா 42 முதல் 50 வருடங்கள் வரையும், ஆம் ஆத்மி 18 முதல் 25 இடங்கள் வரையும் வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிவி ரிசர்ச் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா 36 முதல் 44 இடங்களையும். ஆம் ஆ்த்மி கட்சி 26 முதல் 34 இடங்களையும். காங்கிரஸ் பூஜ்ஜியம் இடங்களையும் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.