ஜனவரி-21, தமிழக பாஜக மாவட்ட தலைவர்களின் முதல் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில், மாநில தலைவர் யார் என்பது இந்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாரதிய ஜனதா கட்சியில் நாடு முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கி கடந்தசில மாதங்களாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உட்கட்சித் தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் கிளை மட்டத்திலிருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் 33 மாவட்டங்களான தலைவர்கள் பட்டியல் இரு தினங்களுக்கு முன் வெளியானது.

அதனைத் தொடர்ந்து எஞ்சி உள்ள மாவட்ட தலைவர்கள் பட்டியல் இன்னும் சில தினங்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட தலைவர்கள் பட்டியல் முழுமையாக வெளியான பின், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது.
அதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி விரைவில் தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவருக்கான மூன்று பேர் அடங்கிய பட்டியலை அவர் தயார் செய்து, டெல்லி தலைமைக்கு அனுப்பி வைப்பார் என்றும், அதிலிருந்து ஒருவர் புதிய தலைவராக அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பட்டியலில் யார் யார் பெயர் இடம் பெறும் என்ற சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போதைய தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பதவியில் நீடிப்பாரா? அல்லது அவருக்கு பதில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பும் பாஜக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

புதிய தலைவருக்கான பட்டியலில் முன்னாள் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன், தேசிய மகளிர் அணி தலைவராக உள்ள வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனினும், வரும் 2026 ஆம் ஆண்டுசட்டப்பேரவை தேர்தலுக்கு முன் புதிய தலைவர் ஒருவரே நியமிக்கலாமா? அண்ணாமலையையே தொடர்ந்து நீடிக்க செய்யலாமா? என்பது குறித்து பாரதிய ஜனதா தேசிய தலைமை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்ணாமலையை பொருத்தவரை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் நன்மதிப்பை பெற்றுள்ளார். அதோடு, அண்ணாமலைக்கு இளைஞர்கள் மத்தியல் நல்ல வரவேற்பு உள்ளது.
அதிமுக தொடர்ந்து பலமுடன் இருப்பதாகவும், கட்சி தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறிவருகிறார். அதனை முறியடித்து கொங்கு மண்டலத்தில் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல அதே பகுதியைச்சேர்ந்த இளைஞரான அண்ணாமலையே தொடர்ந்து தலைவராக நீடிப்பதுதான் கட்சிக்கு பலமாக இருக்கும் என தேசிய தலைமை கருதுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரியைத் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் ஏற்றப்பட்டுள்ள மாற்றம், அதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது உள்ளிட்ட அரசியல் கணக்குகளையும் பாரதிய ஜனதா தேசிய தலைமை போட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தமிழக பாரதிய ஜனதா தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணாமலையே மீண்டும் தேர்வு செய்யப்படலாம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.