ஜனவரி -18, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வு குழுவின் தலைவர் அஜித் அகார்கர் இருவரும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், இளம் வீரரான சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விராட் கோலி, யாசஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஷ் ஐயர் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோரும் அணையில் இடம் பிடித்துள்ளனர். வேகப் பந்துவீச்சாளர்களாக முகமது சமி, ஹர்ஷதீப் சிங் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
எனினும், இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முகமது சிராஜ் மற்றும் கருண் நாயருக்கு இடம் அளிக்கப்படவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தோடரில், இந்திய அணி தனது முதல் போட்டியில் 20 ஆம் தேதி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி பாகிஸ்தானையும், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்து அணியும் எதிர்கொள்கிறது. இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளன.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உட்பட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளன.
இதில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பி பிரிவில் இடம் பிடித்துள்ளன.