ஜனவரி- 18, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஜனவரி 21 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியா குமரியிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.