ஜனவரி-13, இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்தது.
இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குவர்த்தகத்தில் இறக்கம் காணப்பட்டது. ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளதால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குகளை விற்று வருவது இந்திய பங்குச்சந்தைகள் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்க தடை வித்துள்ளதுதால் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 80 டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ரஷ்ய கச்சா எண்ணெய் முக்கிய இறக்குமதி நாடுகளான இந்தியா மற்றும் சீனாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாலும் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1048.90 புள்ளிகள் அதாவது 1.36சதவிகிதம் சரிந்து 76,330.01 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 345.55 புள்ளிகள் அதாவது 1.47 சதவிகிதம் சரிந்து 23.085.95 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. இன்டஸ் பாங்க், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், ஆக்சிஸ் பாங்க், ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்வை சந்தித்தன.
அதானி என்டெர்டெய்ன்மென்ட், டிரண்ட், பாரத் பெட்ரோலியம், பெல், பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சரிவடைந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 58 பைசாக்கள் சரிந்து 86 ரூபாய் 62 பைசாவாக உள்ளது.
இதனிடையே, ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனம் கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 4,591 கோடி ரூபாய் நிகர லாபம் எட்டியுள்ளது. கடந்த காலாண்டில் இந்நிறுவனம் 4350 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்தது.