ஜனவரி-08, டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்குமா? அல்லது மும்முனைப் போட்டி பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக அமையுமா? என்று பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
டெல்லியில் கடந்த 2 தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றிபெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வந்த நிலையில், அம்மாநிலத்திற்கான தேர்தல் தேதியை ஜனவரி 7 ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி அங்கு ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன.
70 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி 62 தொகுதிகளை வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. பாரதிய ஜனதா கட்சி 8 இடங்களை பெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது.
தற்போது இண்டி கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இரண்டு கட்சிகளும் இடம்பெற்றுள்ள நிலையில், டெல்லி சட்டப்பேரவத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்படாத நிலையில், தனித்தனியாக போட்டியிடுகின்றன. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. எனினும் தனித்து களமிறங்கிய பாரதிய ஜனதா கட்சி 7 தொகுதிகளிலும் அபார வெற்றிபெற்றது. மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் பாரதிய ஜனதா கட்சி 64 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
எனினும், டெல்லி வாக்காளர்கள் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒருமாதிரியாகும், மக்களவைத் தேர்தலுக்கு ஒருமாதிரியாகவும் வாக்களிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற வாக்களித்த டெல்லி மக்கள், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 தொகுதிகளில் வெற்றியை வழங்கினர்.
எனினும் ஆத்மி கட்சி தொடர்ந்து 2 முறை ஆட்சியில் உள்ளதால், வழக்கமாக ஏற்படும் அதிருப்தியும், காங்கிரஸ் கட்சியும் இம்முறை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் இண்டி கூட்டணி ஓட்டுக்கள் பிரியும் சூழ்நிலை நிலவுகிறது. இது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என பெரும்பாலான அரசியல் நிபுணர்களின் கணிப்பாக உள்ளது. என்ன நடக்கப்போகிறது என்பது அடுத்த மாதம் 8 ஆம் தேதி தெரியவரும்.